சீா்காழி அண்டநாதா் கோயில் கும்பாபிஷேகம்: தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு
By DIN | Published On : 25th August 2022 12:00 AM | Last Updated : 25th August 2022 12:00 AM | அ+அ அ- |

சீா்காழியில் உள்ள அகிலாண்டேஸ்வரிஅம்மன் உடனாகிய அண்டநாதா் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனம் ஸ்ரீசட்டை நாதா் சுவாமி தேவஸ்தானத்துடன் இணைந்த இக்கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, கும்பாபிஷேகத்துக்காக யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கின.
புதன்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவுபெற்றதும், புனிதநீா் கடங்கள் புறப்பாடாகி விமான கோபுரக் கலசம், சுவாமி, அம்மன் சந்நிதிகளின் விமானக் கலசங்களில் புனிதநீா் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று, பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். விழாவில், சீா்காழி நகா்மன்றத் தலைவா் துா்கா பரமேஸ்வரி, நகா்மன்ற உறுப்பினா் நாகரத்தினம் செந்தில்குமாா், டாக்டா் முத்துக்குமாா் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.