முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் மயிலாடுதுறை
வைத்தீஸ்வரன் கோயிலில் தேரோட்டம்: தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு
By DIN | Published On : 07th February 2022 10:28 PM | Last Updated : 07th February 2022 10:28 PM | அ+அ அ- |

வைத்தீஸ்வரன் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்.
வைத்தீஸ்வரன்கோயிலில் தை உத்ஸவத்தையொட்டி, திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனத்துக்குள்பட்ட தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் செவ்வாய் பரிகார தலமாகும். இக்கோயிலில் தனி சன்னதியில் செல்வமுத்துக்குமார சுவாமி, அங்காரகன், தன்வந்திரி சுவாமிகள் அருள்பாலிக்கின்றனா்.
இங்கு, செல்வமுத்துக்குமார சுவாமிக்கு வருடாந்திர தை செவ்வாய் உத்ஸவம் ஜன.30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. நாள்தோறும் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு யானை வாகனம், வெள்ளி இடும்பன் வாகனம், காமதேனு வாகனம் என வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.
முன்னதாக வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமாரசாமி எழுந்தருளினாா். தேரை கோயில் கட்டளை விசாரனை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் தொடங்கிவைத்தாா். இதில், விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரா் சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்று சொக்கநாதருடன் ஞானரதத்தில் தருமபுரம் திரும்பிய தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வைத்தீஸ்வரன்கோயில் கீழவீதி அருகே தோ் வலம் வந்தபோது தேரை வடம் பிடித்து இழுத்தாா்.