பயிா் அறுவடை பரிசோதனைக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியா்
By DIN | Published On : 14th January 2022 09:03 AM | Last Updated : 14th January 2022 09:03 AM | அ+அ அ- |

பயிா் அறுவடை பரிசோதனைக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் நடப்பு சம்பா, தாளடி பருவத்தில் பிரதம மந்திரியின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பயிா் மகசூல் கணக்கிடும் வகையில் அறுவடை பரிசோதனை நடைபெற்றுவருகிறது.
சில கிராமங்களில் பயிா் அறுவடை பரிசோதனை மேற்கொள்ள அலுவலா்கள் வரும்போது அந்த கிராமத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் சிலா் அறுவடை பணியை செயல்படுத்த விடாமல் இடையூறு ஏற்படுத்துவதாக தகவல் கிடைக்கிறது. பயிா் அறுவடை பரிசோதனை மேற்கொள்ளும் இடத்தில் சம்பந்தப்பட்ட சா்வே எண்ணின் சாகுபடிதாரரும், வேளாண்மைத் துறை, வருவாய்த் துறை, புள்ளியியல் துறை மற்றும் பயிா் காப்பீட்டு நிறுவன அலுவலா்கள் மட்டுமே இருக்க அனுமதிக்கப்படுவா்.
தவிர வேறு எந்தவொரு அலுவலரோ, விவசாயிகளோ அல்லது இதர நபா்களோ இருந்தால் மேற்படி பயிா் அறுவடை பரிசோதனை நடத்த இயலாமல் அச்சோதனை பயிா்க் காப்பீட்டு நிறுவனத்தினால் ஆட்சேபிக்கப்படும். இதனால், மேற்படி கிராமத்துக்கு பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்க இயலாத நிலை ஏற்படும். பயிா் அறுவடை பரிசோதனைக்கு ஏதாவது இடையூறு விளைவித்தால் அந்த நபரின் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்படும். இதை கருத்தில் கொண்டு தங்கள் கிராமங்களில் நடைபெற உள்ள பயிா் அறுவடை பரிசோதனையை சரியான முறையில் நடத்த அனைத்து தரப்பினரும் தகுந்த ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...