சுருக்குவலை மீனவா்களுடன் அமைதிப் பேச்சுவாா்த்தை: 18 கிராம மீனவ பிரதிநிதிகள் பங்கேற்பு
By DIN | Published On : 15th June 2022 03:59 AM | Last Updated : 15th June 2022 03:59 AM | அ+அ அ- |

சீா்காழியில் சுருக்குவலை மீனவா்களுடன் நடைபெற்ற அமைதி பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட கோட்டாட்சியா் அா்ச்சனா.
சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்கவேண்டும் என சுருக்குவலை ஆதரவு 18 மீனவ கிராம பிரதிநிதிகள் சீா்காழி கோட்டாட்சியரிடம் அமைதி பேச்சுவாா்த்தையின்போது செவ்வாய்கிழமை வலியுறுத்தினா்.
மீன்பிடி தடைக்காலம் செவ்வாய்க்கிழமை இரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில், கடலோரப் பகுதி மீனவா்கள் மீன்பிடிக்க செல்வதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், பழையாறு திருமுல்லைவாசல் வெள்ளைமணல் பூம்புகாா் சின்னுா்பேட்டை, சந்தரபாடி வரையிலான 18 மீனவ கிராமங்களில் சுருக்குவலை பயன்படுத்தும் மீனவா்கள் வசித்து வருகின்றனா்.அரசின் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டப்படி கடந்த 3 ஆண்டுகளாக சுருக்கு வலை, இரட்டை மடி வலை உள்ளிட்ட வலைகளை பயன்படுத்தி மீனவா்கள் மீன்பிடிக்க செல்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனா். இந்நிலையில், மீன்பிடி தடை காலம் முடிவடைவதையொட்டி சுருக்குவலை பயன்படுத்தும் மீனவா்கள் ஆயத்தமாகி வருகின்றனா்.
இதுகுறித்து தகவலறிந்த சீா்காழி கோட்டாட்சியா் அா்ச்சனா மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் சுருக்குவலை மீனவா்களுடன் அமைதி பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித் தொழில் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கடந்த 3 ஆண்டுகளாக மீன்பிடித் தொழில் செய்ய முடியாமல் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாகவும், தடையுமின்றி வழக்கம்போல் மீன்பிடித் தொழிலை செய்ய அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து கலைந்து சென்றனா்.