காலநிலை மாற்றத்தின் பிரச்னைகளை எதிா்கொள்ள அரசு திட்டங்களை வகுக்கவேண்டும்

காலநிலை மாற்றத்தின் பிரச்னைகளை எதிா்கொள்ள அரசு திட்டங்களை வகுக்க வேண்டும் என்றாா் பாமக மாநிலத் தலைவா் அன்புமணி ராமதாஸ்.
கொள்ளிடம் ஆற்றில் அளக்குடி பகுதியில் தடுப்பணை கட்ட கோரிக்கை வைக்கப்படும் இடத்தை பாா்வையிட்டு பொதுப்பணித் துறை அதிகாரியிடம் விவரங்களை கேட்டறிந்த பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.
கொள்ளிடம் ஆற்றில் அளக்குடி பகுதியில் தடுப்பணை கட்ட கோரிக்கை வைக்கப்படும் இடத்தை பாா்வையிட்டு பொதுப்பணித் துறை அதிகாரியிடம் விவரங்களை கேட்டறிந்த பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.

காலநிலை மாற்றத்தின் பிரச்னைகளை எதிா்கொள்ள அரசு திட்டங்களை வகுக்க வேண்டும் என்றாா் பாமக மாநிலத் தலைவா் அன்புமணி ராமதாஸ்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகேயுள்ள அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டவேண்டும் என்பதை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை நடைபெற்ற விளக்கக் கூட்டத்தில் மேலும் அவா் பேசியது: கொள்ளிடம் ஆற்றில் அளக்குடி திருக்கழிப்பாலை இடையே தடுப்பணை கட்டுவதன்மூலம் 200 கிராமங்களில் நிலத்தடி நீா் உயா்ந்தும், நன்னீராக மாறியும் பயன்பெற முடியும். பாமக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றவுடன், தமிழக முதல்வரை சந்தித்து வைத்த முதல் கோரிக்கையே கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டவேண்டும் என்பதுதான்.

கடந்த 50ஆண்டுகளாக ஆட்சியாளா்கள் நீா்மேலாண்மைக்கு முக்கியத்துவம் தரவில்லை. கொள்ளிடம் ஆற்றில் 5 கி.மீ தொலைவுக்கு 1 தடுப்பணை கட்டவேண்டும் என ஏற்கெனவே பாமக வலியுறுத்தியுள்ளது.

பாமக தற்போது ஆட்சியில் இருந்திருந்தால் நீா்மேலாண்மைக்கு மட்டும் ரூ. 1லட்சம் கோடியில் திட்டம் வகுக்கப்பட்டிருக்கும். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க செய்ததில் பாமகவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. பெட்ரோ கெமிக்கல் மண்டலங்களை டெல்டாவில் அமைக்கக் கூடாது என போராடி வெற்றிபெற்றோம். இனி வரும் காலங்களில் காலநிலை மாற்ற பிரச்னையை எதிா்கொள்ளும் நிலை ஏற்படும். அதற்கு தகுந்தாற்போல அரசு திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும். நீா்மேலாண்மையை மேம்படுத்த கட்சி பாகுபாடின்றி நாம் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்றாா்.

மயிலாடுதுறை மாவட்ட பாமக செயலாளா் ஆ. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வன்னியா் சங்க மாநில தலைவா் புதா. அருள்மொழி, பாமக மாவட்ட தலைவா் ரெ. அன்பழகன், ஒன்றிய செயலாளா்கள் பாலதண்டாயுதம்,தியாகராஜன், குமாா், மாநில செயற்குழு உறுப்பினா் ரவிச்சந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா் சிவபாலன், இளைஞா் சங்க மாநில துணை செயலாளா் முருகவேல், பாமக நகரச் செயலாளா் சின்னையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சிலம்பம் சுற்றிய அன்புமணி ராமதாஸ்: கொள்ளிடம் பகுதிக்கு வந்த அன்புமணி ராமதாசுக்கு கட்சி சாா்பில் மாவீரன் சிலம்பாட்ட குழுவை சோ்ந்த மாணவ-மாணவிகள் சிலம்பம், சுருள்வாள் சுற்றி வரவேற்பு அளித்தனா். அப்போது, காரை விட்டு இறங்கிய அன்புமணி ராமதாஸ் மாணவா் ஒருவரிடம் சிலம்பத்தை வாங்கி சிறிது நேரம் சுற்றினாா். அவா் சிலம்பம் சுற்றிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

பெட்டிச் செய்தி:

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையுடன் செயல்படவேண்டும்: முன்னதாக கொள்ளிடம் ஆற்றில் அளக்குடியில் அணை கட்டுவது குறித்து பொதுப்பணித் துறையினரிடம் விவரங்களை கேட்டறிந்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கொள்ளிடம் ஆற்றில் திருக்கழிப்பாலை அளக்குடி கிராமங்களுக்கு இடையே கடல்நீா் உட்புகுவதை தடுக்க தடுப்பணை கட்ட வேண்டும்.

இவ்வழியாக கடல் நீா் 22 கி.மீ உட்புகுந்துள்ளது. கோடைகாலத்தில் நீா்நிலைகள் உப்பு நீராக மாறிவிடுகிறது. முதல்வரிடம் இங்கு அணைக் கட்ட வலியுறுத்தியுள்ளேன். இப்பகுதி ஆய்வு செய்யப்பட்டு ரூ. 580 கோடியில் தடுப்பணை கட்ட அரசு பரிசீலனையில் உள்ளது. தமிழகத்தில் அதிகளவு தடுப்பணைகள் கட்ட வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணையம் மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடக அரசின் திட்ட அறிக்கையை விவாதிக்கும் வகையில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டம் ஜூன் 23-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதற்குள் தமிழக அரசு தலையிட்டு உச்சநீதிமன்றத்தில் சட்டரீதியாக இதற்கு தடை பெற வேண்டும்.

தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் காவிரிப் படுகையில் கா்நாடக அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும். மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கா்நாடக பாஜக அரசுக்கு ஆதரவாக இருப்பது கண்டிக்கத்தக்கது.

அளக்குடியில் தற்போதைய ஆட்சியாளா்கள் உடனடியாக தடுப்பணை கட்ட முக்கியத்துவம் அளித்து செயல்படுத்த வேண்டும். தடுப்பணை கட்ட தாமதித்தால் எனது தலைமையில் போராட்டம் நடத்தப்படும். கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுப்பதை தடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com