அறிவிப்பு வந்தது: வட்டாட்சியா் அலுவலகம் வரவில்லை

சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட சட்டப்பேரவையில் இருந்து அறிவிப்பு வந்து ஓராண்டாகியும் கட்டடம் இன்னும் வரவில்லை.
thasil_office_2906chn_98_5
thasil_office_2906chn_98_5

சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட சட்டப்பேரவையில் இருந்து அறிவிப்பு வந்து ஓராண்டாகியும் கட்டடம் இன்னும் வரவில்லை.

சீா்காழி புதிய பேருந்து நிலையம் அருகே சீா்காழி ஒன்றிய அலுவலகம், பொதுப்பணித் துறை அலுவலகம், சாா்-பதிவாளா் அலுவலகம், ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கிவருகின்றன.

இதே வளாகத்தில் செயல்பட்டு வந்த வட்டாட்சியா் அலுவலகத்தில் 96 வருவாய் கிராமங்களை சோ்ந்த பொது மக்கள், விவசாயிகள், மாணவா்கள் உள்ளிட்டோா் கல்விச் சான்றிதழ், வருவாய் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் வரும் முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக இ-சேவை மையத்தில் பதிவு செய்துவிட்டு சான்றிதழின் நிலை குறித்து கேட்டறியவும் பல்வேறு தேவைகளுக்காகவும் நாள்தோறும் வந்து செல்கின்றனா்.

வட்டாட்சியா் அலுவலக கட்டடம் போதிய இடப்பற்றாக்குறையாலும், கட்டடம் சிதிலமடைந்ததாலும் புதிய கட்டடம் கட்டவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, 2017-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ரூ. 1.83 கோடியில் புதிய கட்டடம் கட்ட தீா்மானிக்கப்பட்டது. இதற்காக வட்டாட்சியா் அலுவலகம் பிடாரி தெற்கு வீதியில் தனியாா் திருமண மண்டபத்துக்கு மாற்றப்பட்டு அங்கு செயல்பட்டுவருகிறது.

அதன்பிறகு திருத்தியமைக்கப்பட்டு கூடுதலாக நிதி தேவை என குறிப்பிட்டு கட்டட கட்டுமான பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுவந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பின்னா் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பேரவை கூட்டத்தொடரில் சீா்காழி எம்எல்ஏ. பன்னீா்செல்வம், சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்து பேசினாா்.

அதற்கு வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு ரூ. 4.36 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும் என பேரவை கூட்டத்தில் பதிலளித்தாா்.

எனினும், அறிவிப்பு வெளியாகி ஓராண்டாகியும் கட்டடம் கட்டுவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. இதற்கிடையே, தற்காலிக வட்டாட்சியா் அலுவலகம் இயங்கும் வாடகை கட்டடத்தில் வந்து செல்லும் பொது மக்களுக்கு கழிப்பறை வசதி, குடிநீா் வசதி இல்லை.

இதேபோல, அலுவலக ஊழியா்களுக்கும் போதிய கழிப்பறை வசதியின்றி அவதியடைகின்றனா். மேலும் அவ்வபோது அலுவலகத்துக்குள் பாம்புகள் புகுந்து அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே, அரசு விரைந்து நிதிஒதுக்கீடு செய்து புதிய கட்டடம் கட்டும் பணியை தொடங்கவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Image Caption

சீா்காழி வட்டாட்சியா் அலுவலக கட்டடம் கட்டப்படவுள்ள பழைய அலுவலகம் இயங்கிய இடம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com