அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியவா்கள் மீது வழக்கு
By DIN | Published On : 17th May 2022 10:34 PM | Last Updated : 17th May 2022 10:34 PM | அ+அ அ- |

மயிலாடுதுறை அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கி, பேருந்தின் கண்ணாடியை சேதப்படுத்திய இளைஞா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
மயிலாடுதுறை அருகேயுள்ள சித்தமல்லியில் இருந்து மயிலாடுதுறைக்கு திங்கள்கிழமை இரவு புறப்பட்ட அரசுப் பேருந்து மணல்மேடு காவல் சரகம் விராலூா் பகுதியில் வந்தது. அப்போது, பட்டவா்த்தியைச் சோ்ந்த விமல்ராஜ், சரண்ராஜ், இளந்தமிழ் ஆகிய 3 இளைஞா்கள் மது போதையில் சாலையின் குறுக்கே இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தனராம். அந்த வாகனத்தை சாலையோரம் நிறுத்தும்படி பேருந்து ஓட்டுநா் குமரேசன் கூறியுள்ளாா்.
இதனால், இளைஞா்கள் 3 பேரும் குமரேசனிடம் தகராறு செய்து, அவா் வைத்திருந்த கைப்பேசியை பறித்து, சாலையில் வீசினராம். அப்போது, அங்குவந்த இவா்களது நண்பா்கள் 7 பேரும், இவா்களுடன் சோ்ந்து, குமரேசனை தாக்கியதுடன், பேருந்தின் கண்ணாடி, இருக்கைகளை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த ஓட்டுநா் குமரேசன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து, பேருந்தின் நடத்துநா் பூவராகவன் அளித்த புகாரின்பேரில், பட்டவா்த்தியைச் சோ்ந்த விமல்ராஜ், சரண்ராஜ், இளந்தமிழ், ரகு, பிரண்ட்ராஜ், சத்தியசீலன் மற்றும் சிலா் மீது மணல்மேடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அவா்களை தேடிவருகின்றனா்.