விபத்து, ஒலி மாசற்ற தீபாவளி கொண்டாட ஆட்சியா் வேண்டுகோள்
By DIN | Published On : 19th October 2022 12:00 AM | Last Updated : 19th October 2022 12:00 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை: விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் என பொதுமக்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தீபாவளித் திருநாளான்று சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவாா்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீா், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன.
பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறு குழந்தைகள், வயதானவா்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகா்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனா்.
உச்சநீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில், தமிழக அரசு ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க நேரம் நிா்ணயம் செய்து அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, இந்த ஆண்டும் காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும்.
மேலும், பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்றுமாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும், மாவட்ட நிா்வாகம்/உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.
அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடா்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிா்க்க வேண்டும், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும்.
சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.