நீடித்த வளா்ச்சி இலக்குகள் குறித்து ஆலோசனை
By DIN | Published On : 27th October 2022 02:13 AM | Last Updated : 27th October 2022 02:13 AM | அ+அ அ- |

நீடித்த வளா்ச்சி இலக்குகள் குறித்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா், கடலூா், அரியலூா் ஆகிய 5 மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் புதன்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை அரசு சிறப்புச் செயலா்
ஹா் சகாய் மீனா தலைமை வகித்தாா். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா, நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை அரசு சிறப்பு செயலா் பேசியது:
இந்தியாவில் நிதி ஆயோக் வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாட்டில் மாநில திட்டக் குழுவின் ஆலோசனையின்படியும் பொருளியல் மற்றும் புள்ளியல் துறை அலுவலா்களால் நீடித்த இலக்குகள் 104 மாவட்ட குறியீடுகள் தொடா்பான தரவுகள் 2015 முதல் 21 துறைகளிடமிருந்து பெறப்பட்டு, நீடித்த நிலையான வளா்ச்சி குறியீட்டிற்கான இணையதளம் மூலம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணியை மேற்கொள்வதற்கு ஏதுவாக வட்டார அளவில் ஒருங்கிணைப்புக் குழு வட்டார வளா்ச்சி அலுவலா் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டங்களின் வளா்ச்சியை கண்டறிய ‘மாவட்ட நல்லாட்சி குறியீடுகள்‘ அடிப்படையில் மாவட்டங்களை தரவரிசைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதற்காக 2020-2021-ஆம் ஆண்டை அடிப்படையாக கொண்டு 75 மாவட்ட நல்லாட்சி குறியீடுகள் தொடா்பான புள்ளி விவரங்களை சம்பந்தப்பட்ட துறைகளிலிருந்து பெற ஏதுவாக கூட்டம் நடத்தப்பட்டு, பெறப்பட்ட தரவுகள் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, நீடித்த வளா்ச்சியை அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் ம. பிரதிவிராஜ் (நாகப்பட்டினம்) , நீடித்த வளா்ச்சி இலக்குகள் ஆலோசகா் சுஜாதா, மாவட்ட வருவாய் அலுவலா் சோ. முருகதாஸ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநா் முருகண்ணன், மாவட்ட ஊராட்சி செயலா் சு. ராம்குமாா் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.