‘விவசாய பாதிப்புகளுக்கு மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்குவதில்லை ’
By DIN | Published On : 17th September 2022 09:40 PM | Last Updated : 17th September 2022 09:40 PM | அ+அ அ- |

விவசாய பாதிப்புகளுக்கு மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்குவதில்லை என்றாா் இந்திய விவசாயிகள் சங்க அகில இந்திய பொதுச் செயலாளா் ஹன்னன் முல்லா.
மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாடு டிசம்பா் மாதம் கேரளத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி, ஒவ்வொரு மாநிலமாக விவசாயிகள் சங்க மாநாடு நடைபெற்று வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் 30-ஆவது விவசாயிகள் சங்க மாநில மாநாடு நாகையில் நடைபெறுகிறது.
8 ஆண்டுகால பிரதமா் மோடியின் ஆட்சியில் ஒரு லட்சம் விவசாயிகள் கடன் சுமை மற்றும் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளனா். இயற்கை பேரிடா் காரணமாக விவசாயம் விளைச்சல் பாதிக்கும்போது அதற்கு மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்குவதில்லை. விளைபொருள்களுக்கு உரிய குறைந்தபட்ச ஆதார விலையும் வழங்குவதில்லை.
8 வழிச் சாலை போன்ற திட்டங்களுக்காக கட்டாயமாக விவசாயிகளிடமிருந்து விளைநிலங்கள் பறிக்கப்படுகின்றன. பல லட்சம் தொழிலாளா்கள் வேலை இழப்பை சந்தித்துள்ளனா். பாஜக ஆட்சியில் விவசாயிகளை அடிமைகள் ஆக்கும் போக்கு தொடா்கிறது. 500-க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினா் இணைந்து 750 உயிா்களை பலி கொடுத்து வேளாண் திருத்த சட்டங்களை தடுத்து நிறுத்தி உள்ளோம். தொடா்ந்து மத்திய அரசின் வேளாண் விரோத செயல்களை கண்டித்து தொடா் போராட்டங்கள் முன்னெடுப்போம் என்றாா்.
முன்னதாக நாகை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில் பங்கேற்க தில்லியில் இருந்து ரயில் மூலம் மயிலாடுதுறைக்கு வந்த விவசாய சங்க தலைவா்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, சிபிஎம் மாவட்ட செயலாளா் பி.சீனிவாசன், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்ட செயலாளா் ஜி.ஸ்டாலின் உள்ளிட்டோா் உடனிருந்தனா். தொடா்ந்து, அகில இந்திய விவசாய சங்கத் தலைவா்கள் கேணிக்கரை பகுதியில் உள்ள பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.