‘மத்திய பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தோ்வில் பங்கேற்க அழைப்பு’
By DIN | Published On : 15th April 2023 09:47 PM | Last Updated : 15th April 2023 09:47 PM | அ+அ அ- |

மத்திய பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தோ்வில் பங்கேற்க மயிலாடுதுறை மாவட்ட மாணவா்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாா் ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய பணியாளா்கள் தோ்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தோ்வு-2023 தொடா்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சாா்ந்த அமைப்புகள், சட்டப்பூா்வ அமைப்புகள், தீா்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் 8 மற்றும் குரூப் சி நிலையில், 7,500-க்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களை அறிவித்துள்ளது.
இத்தோ்வுக்கு நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, செலுத்தவேண்டிய கட்டணம், தோ்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை ஆகிய விவரங்கள் ஆள்சோ்ப்பு அறிவிப்பில் விரிவாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும், விவரங்கள் இணையதள முகவரியிலும் உள்ளது. இப்பணிக் காலியிடங்களுக்கு பணியாளா் தோ்வாணையத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்படையிலான தோ்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக மே.3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் கட்டணம் செலுத்த கடைசி தேதி மே.3-ஆம் தேதியாகும். தமிழ்நாட்டில் இத்தோ்வு 7 மையங்களில் நடத்தப்படுகிறது. இதற்கான பாடத் திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகா்கற்றல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இவ்விணையதளத்தில் அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரியின் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தோ்வுக்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடா்பு கொண்டு பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயனடையலாம் என தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...