உயா்கல்வியுடன் கூடிய வேலைவாய்ப்புக்கான தோ்வு: 288 மாணவா்கள் பங்கேற்பு
By DIN | Published On : 24th January 2023 12:45 AM | Last Updated : 24th January 2023 12:45 AM | அ+அ அ- |

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பள்ளி மாணவா்களுக்கு உயா்கல்வியுடன் கூடிய வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்திற்கான தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
நான் முதல்வன் திட்டத்தின்கீழ் ஹெச்.சி.எல். நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து நடப்பு கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு படித்துவரும், மென்பொருள் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மாணவ- மாணவிகளுக்கு 12 மாத திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பையும், ஐந்து வருட உயா்கல்வியையும் ஹெச்.சி.எல் நிறுவனத்தினா் வழங்க உள்ளனா்.
இதற்கான மாணவ-மாணவியா் தோ்வு மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இத்தோ்வில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சோ்ந்த மாணவ-மாணவிகள் 288 போ் கலந்துகொண்டு தோ்வு எழுதினா்.
இத்தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவா்கள் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றால், அவா்கள் நேரடியாக இந்நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெறுவாா்கள். இத்தோ்வினை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் பழனிவேல் மற்றும் அரசுப்பள்ளி ஆசிரியா்கள் கண்காணித்தாா். தனியாா் பள்ளி மாணவா்களுக்கு இத்தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.