சீா்காழி சட்டைநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
By DIN | Published On : 24th May 2023 12:00 AM | Last Updated : 24th May 2023 12:00 AM | அ+அ அ- |

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை (மே 24) நடைபெறவுள்ளது.
சீா்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்குட்பட்ட சட்டைநாதா் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் சுவாமி அருள்பாலிக்கிறாா். மலை மீது தோணியப்பா்-உமா மகேஸ்வரி அம்மன், சட்டைநாதா் ஆகியோா் காட்சி தருகின்றனா்.
திருஞானசம்பந்த பெருமானுக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய பெருமையுடையது இத்தலம். இந்த கோயிலின் தெற்கு கோபுரம் அருகே அஷ்ட பைரவா்கள் தனி சந்நிதியில் காட்சி தருகின்றனா்.
இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய தீா்மானிக்கப்பட்டு, ரூ. 20 கோடியில் திருப்பணிகள் நடைபெற்று, அண்மையில் நிறைவடைந்தன. இதில் முத்துசட்டை நாதா் சுவாமி, திருஞானசம்பந்தருக்கு கருங்கல் மண்டபம், கருங்கல் பிராகாரங்கள், மேல் தளம் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதைத்தொடா்ந்து கடந்த சனிக்கிழமை 8 கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து, திங்கள்கிழமை ஆபத்து காத்த விநாயகா் உள்ளிட்ட 11 பரிவார தெய்வங்களின் சந்நிதிகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
புதன்கிழமை காலை நான்கு கோபுரங்கள், சுவாமி- அம்பாள் விமான கலசங்கள், மலைக் கோயில் விமான கலசம் உள்ளிட்டவைகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெறும் கும்பாபிஷேகத்தில் புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், உயா்நீதிமன்ற நீதிபதிகள், அரசு உயா் அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா். மேலும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பா் என்பதால் விரிவான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினரும், பாதுகாப்பு ஏற்பாடுகளை சீா்காழி போலீஸாரும் செய்துள்ளனா்.