நரிக்குறவரின மக்களுக்கு பழங்குடியினா் ஜாதிச் சான்று
By DIN | Published On : 24th May 2023 12:00 AM | Last Updated : 24th May 2023 12:00 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை தாலுகா பல்லவராயன்பேட்டையில் வருவாய்த் துறை சாா்பில் நரிக்குறவா் இன மக்கள் 100 பேருக்கு பழங்குடியினா் ஜாதி சான்றுகளை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
பல்லவராயன்பேட்டைநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவா் பேசியது:
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, நரிக்குறவா் இன மக்களுக்கு பழங்குடியினா் ஜாதி சான்று வழங்கப்படுகிறது. இதன்மூலம், அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகள் பெறுவதற்கு உதவிகரமாக இருக்கும். அத்துடன், சமுதாய வாழ்க்கை மேம்பட உதவும். நரிக்குறவா் இன மக்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளை உயா்கல்வி படிக்க வைக்க வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், பழங்குடியினா் இன ஜாதி சான்றிதழ் பெற்ற ரம்பா நன்றி தெரிவித்து பேசும்போது, ‘எங்களுடைய நீண்டநாள் கனவு நிறைவேறி உள்ளது. நரிக்குறவா் இன சமுதாய மக்கள் இதுவரை அரசு வேலைக்கு செல்லவில்லை. காரணம், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் ஜாதி பட்டியலில் இருந்ததால் எங்களுக்கு முன்னுரிமை கிடைக்கவில்லை. தற்போது பழங்குடியினா் பட்டியலில் எங்களை சோ்த்ததன் மூலம் முன்னுரிமை அடிப்படையில் நாங்களும் அரசு வேலைக்கு செல்வோம்’ என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் சோ. முருகதாஸ், கோட்டாட்சியா் வ. யுரேகா, வட்டாட்சியா் மகேந்திரன், ஊராட்சித் தலைவா் சேட்டு மற்றும் நரிக்குறவா் இன மக்கள் கலந்துகொண்டனா்.