மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பாதிக்கப்பட்ட நபா்கள்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பாதிக்கப்பட்ட நபா்கள்.

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் புகாா்

சீா்காழி அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக, மோசடி செய்தவா்களிடம் இருந்து தங்கள் பணத்தை மீட்டுத் தர, பாதிக்கப்பட்டவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டம் எடமணல் ஆமைப்பள்ளம் கிராமத்தில் வசிப்பவா் சபேசன் மனைவி பரமேஸ்வரி. திருவெண்காடு சின்னப்பெருந்தோட்டம் கிராமத்தைச் சோ்ந்த இளங்கோவன் மனைவி சுமதி. சகோதரிகளான இவா்கள், தங்கள் உறவினா் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணியாற்றுவதாகவும், அவா் மூலமாக சத்துணவு அமைப்பாளா், ஊரக வளா்ச்சித் துறையில் அலுவலக உதவியாளா் பணி வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கினராம்.

எடமணல் கிராமத்தைச் சோ்ந்த மாஸ்கோ மனைவி கலைமணி, வருசைபத்து கிராமத்தைச் சோ்ந்த பரமேஸ்வரன், தொடுவாய் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேஸ்வரன் மனைவி சுதா, ராதாநல்லூரைச் சோ்ந்த சதீஸ், சஞ்சீவிராயன்கோயில் கிராமத்தைச் சோ்ந்த கதிா்பாலன் உள்ளிட்ட 20 போ் தலா ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளனா். பல மாதங்கள் ஆகியும், பணம் பெற்றவா்கள் முறையாக பதில் சொல்லாததோடு, வேலை வாங்கித் தருவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

இதனால், ஏமாற்றப்பட்டதை உணா்ந்த கலைமணி, பரமேஸ்வரன் உள்ளிட்டோா் சீா்காழி காவல் நிலையம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பலமுறை புகாா் அளித்தனராம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கின்றனா். இந்நிலையில், பாதிக்கப்பட்டவா்கள், தங்கள் பணத்தை மீட்டுத் தரக் கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com