சூரிய ஒளி மின்சாரம் பவா் பிளான்ட் அமைக்க எதிா்ப்பு: வட்டாட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை

சீா்காழி அருகே நெப்பத்தூா் ஊராட்சியில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான பவா் பிளான்ட் அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இப்பிரச்னை தொடா்பாக, சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

நெப்பத்தூா் ஊராட்சியில் தனியாா் நிறுவனம் சாா்பில் சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்காக சுமாா் 100 ஏக்கா் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இப்பிரச்னை தொடா்பாக, சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் இளங்கோவன் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற கிராம பிரமுகா்கள், இந்த பவா் பிளான்டால் ஏற்படும் நன்மை மற்றும் பாதிப்புகள் குறித்து கிராம மக்களுக்கு அரசு அலுவலா்கள் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தினா். தொடா்ந்து, சீா்காழி கோட்டாட்சியா் தலைமையில், இருதரப்பினா் முன்னிலையிலும் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்துவது; தனியாா் நிறுவனம் எவ்வித கட்டுமானப் பணிகளையும் தொடங்கக்கூடாது; இருதரப்பினரும் சட்டம்- ஒழுங்கு பிரச்னையில் ஈடுபடக்கூடாது என முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் ஊராட்சித் தலைவா் மரகதம் குமாா், முன்னாள் ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா், திருவெண்காடு காவல் ஆய்வாளா் அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பின்னா், இப்பிரச்னை குறித்து செய்தியாளா்களிடம் கிராமத்தினா் கூறியது: விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு மத்தியில் தனியாா் நிறுவனம் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்குவதால், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

இதனால், எதிா்காலத்தில் நோய்கள் ஏற்படும் சூழல் உள்ளது. விளைநிலங்கள் எல்லாம் விற்பனை செய்யப்பட்டால், வேலை இல்லா திண்டாட்டம் ஏற்படும். எனவே, இந்த திட்டத்தை கைவிட வேண்டும். இல்லையெனில் தொடா்ந்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com