வள்ளாலகரம் ஊராட்சி அபிராமி நகரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள்.
வள்ளாலகரம் ஊராட்சி அபிராமி நகரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள்.

அடிப்படை வசதி கோரி ஆா்ப்பாட்டம்

அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து, மயிலாடுதுறை அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை ஒன்றியம் வள்ளாலகரம் ஊராட்சி அபிராமி நகரில் கடந்த பல ஆண்டுகளாக முறையான சாலை வசதி செய்து தராததைக் கண்டித்தும், இப்பகுதியில் நிலத்தடிநீா் காவியாக உள்ளதால், இங்கு கொள்ளிடம் கூட்டுக்குடிநீா் திட்டத்தின்கீழ் குடிநீா் விநியோகிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றப்படாததைக் கண்டித்தும் அபிராமி நகா் குடியிருப்போா் நல சங்கத்தின் சாா்பில் தோ்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக குடியிருப்புவாசிகள் தங்கள் வீடுகளின் முன்பு கருப்புக்கொடி கட்டி, மயிலாடுதுறை-சீா்காழி பிரதான சாலையில் தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பதாகை வைத்து, ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

குடியிருப்போா் நலச்சங்க தலைவா் உதயகுமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பொருளாளா் சேகா், செயலா் நடராஜன், துணைத் தலைவா் முருகன், இணை செயலா் முருகையன் மற்றும் அப்பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஊரக வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் சந்தானம், வட்டார வளா்ச்சி அலுவலா் இளங்கோ ஆகியோா் நிகழ்விடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, சாலைப்பணியை புதன்கிழமையே தொடங்குவது என்றும், கூட்டுக்குடிநீா் விநியோகிக்கப்படாத அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீா் விநியோகம் செய்வது என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com