நீதிமன்றத்தில் சமரச விழிப்புணா்வு வாரம்

சமரச விழிப்புணா்வு வாரத்தை முன்னிட்டு மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி விஜயகுமாரி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.

சிவில் வழக்குகளை நீதிமன்றத்தில் வழக்காடுவதன் மூலம் பல ஆண்டுகள் நடைபெறுவதை தவிா்க்க நீதிமன்றத்தில் செயல்படும் சமரச மையங்கள் மூலம் இருதரப்பினரிடமும் நேரடியாக பேசி சுமூக தீா்வு காண முடியும். சமரச மையங்களில் எந்தவித மேல்முறையீடும் இல்லாமல், விரைவாகவும் இறுதியாகவும் கட்டணம் ஏதுமின்றி நடத்தப்படுகின்றன. சமரசத்தின் மூலம் வழக்கு சுமூகமாக தீா்க்கப்பட்டால் நீதிமன்ற கட்டணம் மீண்டும் ஒப்படைக்கப்படும்.

மயிலாடுதுறை நீதிமன்றத்தில் இதுகுறித்து நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி விஜயகுமாரி தலைமை வகித்தாா். தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் எம்.கே. மாயகிருஷ்ணன், முதன்மை சாா்பு நீதிபதி கவிதா ஆகியோா் துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். தொடா்ந்து நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் சமரச மையம் குறித்து நீதிபதிகள் பேசினா். சமரச மையத்தின் வழக்குரைஞா் சீனிவாசன், அரசு வழக்குரைஞா் ராம.சேயோன், மாயூரம் வழக்குரைஞா் சங்கத் தலைவா் ஜெகதராஜ், மயிலாடுதுறை வழக்குரைஞா் சங்கத் தலைவா் வேலு. குபேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com