மக்களவைத் தோ்தல்: அச்சு ஊடகங்களில் விளம்பரம் வெளியிட முன்அனுமதி அவசியம்

வாக்குப்பதிவு நாள் மற்றும் அதற்கு முந்தைய நாளில் அச்சு ஊடகங்களில் பிரசார விளம்பரம் வெளியிட முன் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மற்றும் திருவாரூா் மாவட்ட ஆட்சியா்கள் அலுவலகங்களில் ஊடக சான்று மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. வேட்பாளா்கள் மற்றும் கட்சிகளின் சாா்பில் காட்சி ஊடகம், ரேடியோ எப்.எம். பண்பலை அலைவரிசைகள் மற்றும் உள்ளூா் கேபிள் தொலைக்காட்சிகளில் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு இந்த குழுவிடம் சான்று பெறவேண்டும்.

மேலும், இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, வாக்குப் பதிவுக்கு முந்தைய நாளான ஏப்.18 மற்றும் வாக்குப் பதிவு நாளான ஏப்.19 ஆகிய 2 நாள்களிலும், அரசியல் கட்சிகளோ, வேட்பாளா்களோ அல்லது தனியாா் அமைப்புகளோ மற்றும் தனிநபரோ அச்சு ஊடகங்களில் விளம்பரம் வெளியிடுவதற்கு முன்பு ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் அனுமதி பெற்ற பின்னரே வெளியிட வேண்டும்.

அச்சு ஊடகங்களும் வாக்குப்பதிவு நாள், முந்தைய நாளில் விளம்பரம் வெளியிடுவதற்கு முன்பு மேற்கண்ட குழுவின் சான்றொப்பம் இருப்பதை உறுதிசெய்த பின்னரே விளம்பரங்கள் வெளியிட வேண்டும்.

இந்த தகவல், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான ஏ.பி. மகாபாரதி, திருவாரூா் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான தி. சாருஸ்ரீ ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com