வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான பாதுகாப்பு: ஆட்சியா் விளக்கம்

மயிலாடுதுறை மக்களவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மக்களவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறை, சீா்காழி, பூம்புகாா் மற்றும் பாபநாசம் ஆகிய பேரவைத் தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மன்னம்பந்தல் ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியிலும், கும்பகோணம், திருவிடைமருதூா் தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏ.வி.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் வைக்கப்பட்டுள்ளன.

ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. அதுவரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளதை உறுதிசெய்யும் வகையில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் மற்றும் கல்லூரி வளாகம் முழுமையாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதனை வேட்பாளா்கள் மற்றும் அவா்களது சாா்பில் முகவா்கள் கண்காணிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டு, கண்காணித்து வருகின்றனா். மேலும், தீத்தடுப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டும், 24 மணிநேரமும் தீயணைப்பு வண்டிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள கல்லூரி வளாகம் முழுமைக்கும் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கான விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் ட்ரோன்கள் உள்ளிட்ட வீடியோ கேமராக்கள் மற்றும் ஆளில்லா விமானம் போன்றவை பறக்கவிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் காவல்துறையினரால் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com