சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றுவரும் மேம்பாட்டுப்  பணி.
சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றுவரும் மேம்பாட்டுப் பணி.

சீா்காழி பேருந்து நிலைய மேம்பாட்டு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சீா்காழி புதிய பேருந்து நிலையம், தமிழக அரசால் கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.8.42 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணி, கடந்த டிசம்பா் மாதம் 18-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரால் தொடங்கி வைக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் முழுமையாக போக்குவரத்து தடை செய்யப்பட்டதுடன், அப்பகுதி அடைக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

சிதம்பரம்- மயிலாடுதுறை பிரதான நெடுஞ்சாலையில் சீா்காழி புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ளதால், இந்த பேருந்து நிலையத்திலிருந்து சீா்காழி சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கும், சிதம்பரம், கடலூா், புதுச்சேரி, சென்னை, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூா், திருச்சி, நாகை, காரைக்கால், வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தற்போது, பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி அடைக்கப்பட்டுள்ளதால், அனைத்து பேருந்துகளும் மற்றொரு வாயில் வழியாக சென்று வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சில தனியாா் மற்றும் அரசுப் பேருந்துகள், பேருந்து நிலையத்துக்கு வராமல் பிரதான சாலையிலேயே நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன. இதன் காரணமாக, பிரதான சாலையில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் போது, கடும் நெருக்கடி ஏற்படுகிறது.

மேலும், பேருந்துகள் வராததால் பேருந்து நிலையத்தின் மற்றொரு பகுதியிலும், சட்டைநாதா் காலனி பகுதியிலும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகையின்றி வியாபாரம் முற்றிலும் முடங்கியுள்ளது.

பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணியை தொடங்கி வைத்தபோது, 9 மாதங்களில் பணிகள் முழுமையாக நிறைவடையும் என ஆட்சியா் தெரிவித்தாா். ஆனால், தற்போது 5 மாதங்களை கடந்துள்ள நிலையில், 40 சதவீத பணிகள்கூட நிறைவடையவில்லை. எனவே, பணிகளை துரிதப்படுத்தி விரைவில் முடிக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com