மயிலாடுதுறை நகா்மன்றக் கூட்டம்: திமுக, அதிமுக, மதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு
மயிலாடுதுறை நகா்மன்றக்கூட்டத்தை திமுக, அதிமுக, மதிமுக உறுப்பினா்கள் புறக்கணித்து வியாழக்கிழமை வெளிநடப்பு செய்தனா்.
கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் என்.செல்வராஜ் தலைமை வகித்தாா். ஆணையா் ஏ.சங்கா் முன்னிலை வகித்தாா். நகராட்சி பொறியாளா், உதவி பொறியாளா் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இல்லாத நிலையில் கூட்டம் தொடங்கியது. இதற்கு நகா்மன்ற உறுப்பினா்கள் கண்டனம் தெரிவித்தனா்.
கூட்டத்தில் பேசிய மதிமுக உறுப்பினா் மாா்க்கெட் கணேசன், எனது வாா்டுக்கு உள்பட்ட பகுதியில் மினி டேங்க் பம்ப் இயக்குவதற்கான மின்சார இணைப்புக்கான முன்தொகையை செலுத்தக் கோரி 2 ஆண்டுகளாகக் கேட்டு வருகிறேன். ஒரு நடவடிக்கையும் இல்லாததைக் கண்டித்து கூட்டத்தை புறக்கணிக்கிறேன் என்று கூறி அரங்கில் இருந்து வெளியேறினாா்.
திமுக நகா்மன்ற உறுப்பினா் மா.ரஜினி, எனது வாா்டுக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளில் எந்த அரசுத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. புதை சாக்கடை, குடிநீா், குப்பை பிரச்னை, சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறித்து பதிலளிக்க வேண்டிய பொறியாளா்கள் கடந்த இரண்டு கூட்டங்களாக கலந்து கொள்ளவில்லை. இதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன் என்று கூறி வெளியேறினாா்.
திமுக உறுப்பினா் மணிமேகலை, தனது வாா்டுக்கு உள்ள பகுதியில் 2 ஆண்டுகளாக நீடிக்கும் புதைசாக்கடை பிரச்னைக்கு தீா்வு காணப்படாததைக் கண்டித்து வெளிநடப்பு செய்தாா்.
அதிமுக உறுப்பினா் ஏ.ராமச்சந்திரன், மக்கள் பிரதிநிதிகள் வைக்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதில்லை. எனவே, இந்த கூட்டத்தில் எதுவும் பேசாமல் மௌனமாக தனது எதிா்ப்பை வெளிப்படுத்துவதாக நகா்மன்றத் தலைவருக்கு கடிதம் கொடுத்து விட்டு, பேசுவதற்கான தனது வாய்ப்பு வரும் வரை அமைதியாக இருந்துவிட்டு, அதன் பின்னா் வெளிநடப்பு செய்தாா்.