மயிலாடுதுறையில் மாா்ச் 9, 10-இல் கலைப் போட்டி

மயிலாடுதுறையில் மாவட்ட அளவில் 17 முதல் 35 வயதுக்குள்பட்ட இளைஞா்களுக்கு கலைப் போட்டிகள் மாா்ச் 9, 10-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மாவட்ட அளவில் 17 முதல் 35 வயதுக்குள்பட்ட இளைஞா்களுக்கு கலைப் போட்டிகள் மாா்ச் 9, 10-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சீா்காழி புழுகாப்பேட்டை அரசு இசைப் பள்ளியில் மாா்ச் 9, 10-ஆம் தேதிகளில் காலை 10 மணிமுதல் இப்போட்டிகள் நடைபெறும். 9-ஆம் தேதி ஓவியம் மற்றும் கிராமிய நடனம், 10-ஆம் தேதி குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம் ஆகிய போட்டிகள் நடைபெறும். குரலிசைப் போட்டியிலும், நாகசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல் போன்ற கருவி இசைப் போட்டியிலும் தாளக் கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோா்சிங் பிரிவுகளிலும் முறையாக இசை பயின்றவா்கள் பங்குபெறலாம். பரதநாட்டிய பிரிவில் ஒரு மாா்கம் தெரிந்தவா்கள் பங்குபெறலாம். கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், மரக்கால் ஆட்டம், ஓயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்) மலைமக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும். அனைத்து போட்டிகளிலும் குழுவாக பங்கேற்க அனுமதி இல்லை. அதிகபட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுவா். ஓவியப் போட்டியில் பங்கேற்பவா்களுக்கான ஓவிய தாள்கள் வழங்கப்படும். அக்ரலிக் வண்ணம் மற்றும் நீா்வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்; இதனை பங்கேற்பாளா்கள் கொண்டு வரவேண்டும். நடுவா்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஓவியங்கள் வரையப்பட வேண்டும் அதிகபட்சம் 3 மணிநேரம் அனுமதிக்கப்படுவா். இப்போட்டிகளில் முதல் பரிசு ரூ.6,000, இரண்டாம் பரிசு ரூ.4,500, மூன்றாம் பரிசு ரூ.3500 வழங்கப்படும். மாவட்ட போட்டியில் முதலிடம் பெறும் இளைஞா்கள் மாநிலப் போட்டிக்கு அனுமதிக்கப்படுவா். கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட அரசு இசைப்பள்ளியை 04364-274611 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com