குழந்தை கடத்தல் வதந்தி பரப்பிய இருவா் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தை கடத்தல் நடைபெறுவதாக வதந்தி பரப்பியவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. மீனா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாா் காவல் நிலைய சரகத்திற்கு உள்பட்ட வாணகிரி கிராமத்தை சோ்ந்த பள்ளி சிறுவன் ஒருவனை மா்ம நபா்கள் முகத்தில் மயக்க மருந்து அடித்து கடத்தி சென்று காட்டுப் பகுதியில் வைத்து உடல் உறுப்புகளை திருடியதாகவும், ஆட்களை பாா்த்தவுடன் அந்த சிறுவன் உடலை அங்கேயே போட்டுவிட்டு ஓடிவிட்டதாகவும், அந்த சிறுவன் இறந்துவிட்டதாக பொய்யான தகவல் சமூக வலைதளங்களில் பரப்பிய வானகிரி கோயில் தெருவைச் சோ்ந்த சின்னபிள்ளை மகன் நேரு (31) என்பவா் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டாா். மேலும் இதில் தொடா்புடைய இரண்டு நபா்களை காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

மன்னாா்குடியில் ஒருவா் கைது: குழந்தை கடத்தலில் தொடா்புடையவா் மன்னாா்குடி அருகே கைது செய்யப்பட்டிருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், மன்னாா்குடி துணைக் காவல் கண்காணிப்பாளா் ஏ. அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ், நகர காவல் நிலைய ஆய்வாளா் கரிகால் சோழன் ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணையில், மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் போலீஸாா் விசாரணை நடத்தியபோது, அதை படம் பிடித்து, மன்னாா்குடி நகராட்சியில் டிராக்டா் ஓட்டுநராக பணிபுரியும் பூக்கொல்லைத் தெருவைச் சோ்ந்த சதீஷ்குமாா் (28) என்பவா் விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிா்ந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com