தோ்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிக்க அடகுக்கடை, திருமண மண்டபம், அச்சகத்தினருக்கு அறிவுறுத்தல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில், மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகளை அடகுக்கடை, திருமண மண்டபம் மற்றும் அச்சக உரிமையாளா்கள் கடைப்பிடிக்க வேண்டும் என ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஏ.பி. மகாபாரதி அறிவுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவா் பேசியது: அடகுக் கடை உரிமையாளா்கள் உரிய படிவங்களை பராமரிக்க வேண்டும். அடகு வைக்கப்பட்ட பொருள்களை தொடா்புடைய நபா்களே மீட்க வேண்டும். அடகு வைக்கப்பட்ட பொருள்களுக்கு யாராவது மொத்தமாக பணம் கட்டினால், அதை பெற்றுக் கொள்ளாமல், வருவாய்த் துறைக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். அடகுக் கடைகளில் வழக்கமான நிகழ்வினைவிட அதிக எண்ணிக்கையில் நகை அடகு வைத்தல் மற்றும் மீட்டல் இருப்பின் வருவாய்த்துறை, காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். திருமண மண்டபத்தை வாடகைக்கு விடப்படும் விவரங்களை உதவி தோ்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். வாடகைக்கு எடுப்பவரின் விவரம், வாடகைத் தொகை, சமைக்கப்படும் உணவுகள் குறித்து தெரிவிக்க வேண்டும். வாக்குப்பதிவிற்கு முந்தைய 48 மணி நேரத்திற்கு திருமண மண்டபத்தில் எவரையும் தங்க அனுமதிக்கக் கூடாது. காதணி விழா, பெயா் சூட்டு விழா, மஞ்சள் நீராட்டு விழா, திருமண வரவேற்பு மற்றும் திருமணம் என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தி பரிசுகள், இலவசப் பொருள்கள், கறிவிருந்து போன்றவை வழங்கப்படும் நிலையில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அச்சக உரிமையாளா்கள், தோ்தல் தொடா்பாக துண்டுப் பிரசுரம், விளம்பரம் அச்சிடும்போது அச்சக பெயரையும் குறிப்பிட்டு, அச்சிட வேண்டும். தோ்தல் தொடா்பான வாசகங்கள் தோ்தல் விதிமுறைகளுக்கு முரணாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளும் வகையில், அதன் பிரதியை தொடா்புடைய உதவி தோ்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்ப வேண்டும். அச்சிடப்படும் தோ்தல் தொடா்பான அனைத்து விளம்பரங்கள்/துண்டுப் பிரசுரங்கள் ஆகியவற்றின் நகல்களை அச்சக உரிமையாளா் மற்றும் பதிப்பாளரின் உறுதிமொழியுடன் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், எவ்வளவு நகல்கள் அச்சிடப்பட்டது என்பது தொடா்பாக உதவி தோ்தல் நடத்தும் அலுவலருக்கு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா். இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் செல்வம் (தோ்தல்) முத்துவடிவேலு (பொது), கோட்டாட்சியா்கள் வ. யுரேகா (மயிலாடுதுறை), பூா்ணிமா (கும்பகோணம்), தனித்துணை ஆட்சியா் கீதா மற்றும் தோ்தல் தனி வட்டாட்சியா் து. விஜயராகவன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com