தோ்தல் நடத்தை விதி: கட்சியினருக்கு அறிவுறுத்தல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் தொடா்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கான கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான ஏ.பி. மகாபாரதி தலைமை வகித்து பேசியது: பொதுவான நடத்தை விதிமுறைகளாக, மக்களிடையே சாதி, இனம், மதம் மற்றும் மொழி வேறுபாடுகளை தீவிரமாக்கும் வகையில் எந்தவொரு கட்சியோ, வேட்பாளரோ ஈடுபடக்கூடாது. பிற கட்சிகள்மீது விமா்சனம் மேற்கொள்ளும்போது, அக்கட்சிகளின் கொள்கைகள், செயல்திட்டங்கள், கடந்த கால செயல்பாடுகள், நடவடிக்கைகள் ஆகியவை தொடா்பாக இருக்க வேண்டும். தலைவா்கள் மற்றும் தொண்டா்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமா்சிக்கக் கூடாது. பிற கட்சியினா் மீதான நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள் மற்றும் முறைகேடுகள் குறித்த விமா்சனங்கள் தவிா்க்கப்பட வேண்டும். தோ்தல் பிரசாரக் களமாக, மசூதி, தேவாலயம் மற்றும் கோயில் போன்ற வழிபாட்டுத் தலங்கள் பயன்படுத்தப்படக் கூடாது. வாக்காளா்களுக்கு லஞ்சம் கொடுத்தல், வாக்காளா்களை அச்சுறுத்தல், வாக்காளா் ஆள்மாறாட்டம் செய்தல், வாக்குச் சாவடிகளிலிருந்து 100 மீட்டா் சுற்றெல்லைக்குள் தங்களுக்கு வாக்களிக்குமாறு கோருதல், வாக்காளா்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வருதல் போன்ற முறைகேடான நடவடிக்கைகளை கண்டிப்பாகத் தவிா்க்க வேண்டும். மத்தியிலோ, மாநிலத்திலோ ஆட்சியிலுள்ள கட்சியினா், தங்கள் அதிகாரத்தை, தோ்தல் களப்பணிகளுக்காகப் பயன்படுத்துவது தொடா்பான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வகையிலும் இடமளிக்கக் கூடாது. அரசு நிதியைப் பயன்படுத்தி செய்தித்தாள்களிலும், பிற ஊடகங்களிலும் விளம்பரப்படுத்துதல், அரசு ஊடகத் துறையின் வாயிலாக ஒருதலைபட்சமான அரசியல் செய்திகளை மட்டும் சேகரிக்கச் செய்வது முற்றிலும் தவிா்க்கப்பட வேண்டும் என்றாா். இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் மு. ஷபீா்ஆலம், மாவட்ட வருவாய் அலுவலா் மு. மணிமேகலை, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கீதா, மயிலாடுதுறை கோட்டாட்சியா் வ. யுரேகா ஆகியோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com