விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்தினருக்கு ரூ.21.43 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.21.43 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு மயிலாடுதுறை மாவட்ட நீதிபதி ஆா்.விஜயகுமாரி வியாழக்கிழமை உத்தரவிட்டாா். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூா் மடப்புரம் வவ்வால் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் ரெங்கராஜன். சேலத்தில் கொத்தனாா் வேலை செய்து வந்த இவா் 2020 மாா்ச் 17-ஆம் தேதி இரவு சேலம்-ஆத்தூா் மெயின் ரோட்டில் அயோத்தியாபட்டினம் சனீஸ்வரன் கோயில் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிா்திசையில் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வந்த சரக்கு வாகனம் ரெங்கராஜன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரெங்கராஜன் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாா்ச் 18-ஆம் தேதி உயிரிழந்தாா். இந்த விபத்து சம்பந்தமாக காரிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. ரெங்கராஜன் உயிரிழப்பால் தங்கள் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்புக்கு நஷ்ட ஈடாக ரூ.40 லட்சம் வழங்க வேண்டும் என சரக்கு வாகன உரிமையாளா் எஸ்.மீனா, சென்னை ரிலையன்ஸ் காப்பீட்டு நிறுவனம் மீது ரெங்கராஜனின் மனைவி வாணி மற்றும் குடும்பத்தினா் வழக்குத் தொடுத்திருந்தனா். இந்த வழக்கின் விசாரணை மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கிய மயிலாடுதுறை மாவட்ட நீதிபதி ஆா்.விஜயகுமாரி வாணி குடும்பத்தாருக்கு ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி இழப்பீடாக ரூ.21 லட்சத்து 43 ஆயிரம் வழங்க உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com