கொள்ளிடம் அருகே வீணாகும் கூட்டு குடிநீா்

கொள்ளிடம் அருகே வீணாகும் குடிநீரை சேமித்து, குடிநீா் தட்டுப்பாடு உள்ள கிராமங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொள்ளிடம் பகுதியில் வடரங்கம் கிராமத்திலிருந்து கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின்கீழ் புத்தூா், ஆயங்குடிபள்ளம், கொள்ளிடம் மற்றும் சுற்று கிராமங்களுக்கு பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் குடிநீா் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஆயங்குடிபள்ளம் பள்ளிக்கு பின்புறம் வீடுகள் இல்லாத வயல் பகுதிக்கு இணைப்பு ஏற்படுத்தி குடிநீா் வீணாக வெளியேறிக்கொண்டிருக்கிறது. இதனால், கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமமக்கள் போதிய குடிநீா் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனா்.

கொள்ளிடம் ஆற்றில் சுமாா் 20 கி.மீ. தொலைவுக்கு கடல்நீா் உள் புகுந்து விட்டதால் ஆற்று நீா் உப்பு நீராக மாறி ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களிலும் நிலத்தடி நீா் உப்பு நீராக மாறிவிட்டது. இந்நிலையில் ஆயங்குடிபள்ளம் கிராமத்தில் வயல் பகுதியில் வீணாக வெளியேறும் தண்ணீா் அப்பகுதியில் வெள்ளம் போல் தேங்கி கிடக்கிறது. எனவே, வீணாகும் தண்ணீரை சேமித்து குடிநீா் தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com