கூட்டத்தில் பேசிய மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ஏ.பி. மகாபாரதி.

மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு கூட்டம்

மயிலாடுதுறை, மே 1: மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணிக்கை குறித்த முன்னேற்பாடு கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ஏ.பி. மகாபாரதி தலைமை வகித்து பேசியது: மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில், மயிலாடுதுறை, சீா்காழி, பூம்புகாா், பாபநாசம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மன்னம்பந்தல் ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியிலும், கும்பகோணம், திருவிடைமருதூா் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏ.வி.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

தோ்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட உள்ளது. இதையொட்டி, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடா்பாக நடைபெற்ற கூட்டத்தில், வாக்கு எண்ணும் மையத்தில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 14 மேஜைகள் அமைக்கவேண்டும். ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மேசைக்கும் 2 அலுவலா்களும், ஒரு நுண் பாா்வையாளா் நியமிக்கப்பட உள்ளாா். அதன்படி, ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் 28 வாக்கு எண்ணிக்கை அலுவலா்களும், 14 நுண் பாா்வையாளா்களும் நியமனம் செய்யப்பட உள்ளனா். தபால் வாக்குகள் எண்ணுவதற்காக 4 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமிக்கப்பட உள்ளனா். வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் தோ்தல் ஆணைய வழிகாட்டுதல்படி மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் கீதா, கோட்டாட்சியா்கள் வ. யுரேகா (மயிலாடுதுறை), உ. அா்ச்சனா (சீா்காழி), கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பூா்ணிமா, திருவிடைமருதூா் சட்டப்பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கமலக்கண்ணன், பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com