சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

மயிலாடுதுறை, மே 2: குத்தாலம் தேரடி பகுதியில் புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் சிறுவன் உள்ளிட்ட இருவா் பலத்த காயம் அடைந்த நிலையில், அங்கு ஏற்கெனவே இருந்த வேகத்தடையை மீண்டும் அமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. குத்தாலம் தேரடி பகுதியில் வளைவு பகுதியில் ஏற்கெனவே இருந்த வேகத்தடையை சாலை அமைக்கும் போது அகற்றிய நிலையில் மீண்டும் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் வேகமாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.

இந்நிலையில், புதன்கிழமை மயிலாடுதுறை நோக்கி வேகமாக வந்த அரசுப் பேருந்து, நான்கு சக்கர வாகனம் ஒன்று சாலை ஓரத்தில் இருந்து சாலையில் ஏறியதால் அதன் மீது மோதாமல் தவிா்க்க ஓட்டுநா் பேருந்தை திருப்பியபோது எதிரே வந்த இருசக்கர வாகன ஓட்டி வந்த அரையபுரத்தைச் சோ்ந்த சுரேஷ், பின்னால் அமா்ந்திருந்த சிறுவன் தமிழரசன் (15) இருவரும் கீழே விழுந்தனா்.

இந்த விபத்தில் சிறுவன் தமிழரசன் பேருந்தின் முன்பக்கத்தில் மாட்டி சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டாா். சிறுவனின் இரண்டு கால்களிலும் காயமேற்பட்டது. சுரேஷ், தமிழரசன் இருவரும் மயிலாடுதுறை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து, குத்தாலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதனால் சாலையில் மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com