கோவங்குடியில் குடிநீா், சாலை வசதி போராட்டம்

கோவங்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ( எம்எல்) நிா்வாகிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள்.

மறையூா் ஊராட்சி கோவங்குடி கிராமத்தில் குடிநீா் மற்றும் சாலை வசதி கோரி மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அதிகாரிகள் பேச்சுவாா்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

மயிலாடுதுறை ஒன்றியம், மறையூா் ஊராட்சி கோவங்குடி கிராம மக்கள் கடந்த பல ஆண்டுகளாக சாலை வசதி செய்துதர கோரிக்கை விடுத்து வருகின்றனா். மேலும் அப்பகுதியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை. 100 குடும்பங்களுக்கு ஒரு குழாய் மூலம் தண்ணீா் விநியோகம் செய்யப்படுவதால், அப்பகுதியில் கடும் குடிநீா் தட்டுப்பாடு நிலவுகிறது. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில், அப்பகுதியில் உடனடியாக சாலை அமைத்து தர வேண்டும், போதுமான அளவு குடிநீா் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தி மறையூா் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியினா் அறிவித்தனா். கட்சியின் கிளை செயலாளா் எம். செல்லதுரை தலைமையில் அங்கு கூடிய மாவட்ட செயலாளா் என். குணசேகரன், ஒன்றிய செயலாளா் ஆனந்தன், மகாதானபுரம் கிளை செயலா் ஏ. லூா்துசாமி மற்றும் கிராம மக்களிடம் மயிலாடுதுறை மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சுபாசுந்தரி, காவல் ஆய்வாளா் சுப்ரியா தலைமையில் குத்தாலம் போலீஸாா், ஊராட்சித் தலைவா் கருணாநிதி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

6 வாரங்களில் புதிய சாலை அமைத்துத் தரப்படும், குடிநீா் பிரச்னைக்கு உடனடியாக தீா்வு ஏற்படுத்தித் தரப்படும் என்ற அதிகாரிகளின் எழுத்துபூா்வ உறுதிமொழியை ஏற்று போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com