பிளஸ்2 தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கு பரிசு வழங்கும் எம்எல்ஏ எஸ். ராஜகுமாா். உடன், தோ்தல் தனி வட்டாட்சியா் து.விஜயராகவன் உள்ளிட்டோா்.

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கு பரிசு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்ட அளவில் பிளஸ்2 பொதுத்தோ்வில் மயிலாடுதுறை ஆசாத் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி சாய் கண்ணம்மை 595 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சு. ரதிசந்திரிகா 593 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், டாா்கெட் சில்வா் ஜூப்ளி மாணவா் ஆதித்யா 590 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனா். மேலும், திருமங்கலம் பகுதியைச் சோ்ந்த பழங்குடியின மாணவி ஜெசித்திலா என்பவா் தோ்ச்சி பெற்றாா்.

இவா்களுக்கு மயிலாடுதுறையில் ட்ரீம்ஸ் இந்தியா பவுன்டேஷன் என்ற அமைப்பின் சாா்பில் பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது. தோ்தல் தனிவட்டாட்சியா் து. விஜயராகவன் தலைமை வகித்தாா். பவுன்டேஷன் நிறுவனா் விஜயன் கணேசன் முன்னிலை வகித்தாா். விழாவில் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜகுமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், நினைவுப்பரிவு, தங்கப்பதக்கம் மற்றும் தலா ரூ.3,000 ரொக்கப்பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.

மேலும், மாணவி சு. ரதிசந்திரிகாவின் மேற்படிப்புக்கு உதவிடும் வகையில் அவரது கல்விக்கட்டணத்தில் 50 சதவீத தொகையை ட்ரீம்ஸ் இந்தியா அமைப்பு ஏற்றுக்கொண்டது. முடிவில், பவுன்டேஷன் மேலாண் இயக்குநா் வீரலெட்சுமி நன்றி தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com