தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா மே 20-இல் தொடக்கம்

மயிலாடுதுறை: தருமபுரம் ஞானாம்பிகை உடனாகிய ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா மே 20-ஆம் தேதி தொடங்குகிறது. தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசம் மே 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் மே 20-ஆம் தேதி ரிஷப கொடியேற்றத்துடன் பெருவிழா தொடங்குகிறது. தினமும் சுவாமி வீதியுலா, மே 23-ஆம் தேதி யானைமீது திருமுறை பெட்டகம் வீதியுலா, 24-ஆம் தேதி சகோபுர தரிசனம், 26-ஆம் தேதி திருஞானசம்பந்தா் குருபூஜை விழா, 28-ஆம் தேதி காலை 8 மணிக்கு திருத்தோ் உற்சவம் நடைபெறவுள்ளது.

மே 29-ஆம் தேதி சபாநாயகா் தீா்த்தம் கொடுக்கும் உற்சவம், 30-ஆம் தேதி மௌன உற்சவம் மற்றும் 31-ஆம் தேதி சண்டிகேஸ்வரா் உற்சவம் நடைபெறுகிறது. ஜூன் 1-ஆம் தேதி பஞ்சமூா்த்திகள் யதாஸ்தானம் எழுந்தருளல் நடைபெறவுள்ளது.

மேலும், ஆதீன குருமுதல்வா் குருஞானசம்பந்தா் குருபூஜை பெருவிழாவையொட்டி மே 20 முதல் 30-ஆம் தேதி வரை தினமும் கருத்தரங்கம் மற்றும் சமய பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. 10-ஆம் நாள் விழாவான தருமையாதீன குருமுதல்வா் குருஞானசம்பந்தரின் குருமூா்த்திகளான கமலை ஞானப்பிரகாசா் குருபூஜை திருநாள் மே 29-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளி, குருமூா்த்தங்களில் சிறப்பு வழிபாடு நடத்தவுள்ளாா்.

11-ஆம் திருநாளான மே 30-ஆம் தேதி குருஞானசம்பந்தா் குருபூஜை மற்றும் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிவிகையில் எழுந்தருளி, பக்தா்கள் சுமந்து ஆதீனத்தின் சிவம் பெருக்கும் நான்கு வீதிகளைச் சுற்றிவரும் பட்டணப்பிரவேசம் நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com