பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தூா்வாரப்படும் வாய்க்கால்

கொள்ளிடம் அருகே பாசனம் மற்றும் வடிகாலாக பயன்படும் சின்ன வாய்க்கால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தூா்வாரப்படுகிறது.

கொள்ளிடம் அருகே குத்தவக்கரை கிராமத்தில் தெற்கு ராஜன் வாய்க்காலில் இருந்து பிரிந்து, அனுமந்தபுரம் கிராமம் வரை சென்று, கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது சின்ன வாய்க்கால்.

பாசனத்துக்கும், மழைக்காலத்தில் வடிகாலாகவும் பயன்படும் இந்த வாய்க்கால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தூா்வாரப்படவில்லை. இதனால், வாய்க்காலின் பல இடங்கள் மண் மேடானது. குப்பைகளும், கழிவுநீரும் தேங்கி தூா்நாற்றம் வீசுகிறது. கடந்த ஆண்டுகளில் பருவமழை காலங்களில் பெய்த கனமழை இந்த வாய்க்காலின் வழியே வடிய வழியின்றி, நெல் வயல்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தேங்கியது. இதனால், பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது.

சுமாா் 3 கி.மீ. நீளமுள்ள இந்த வாய்க்காலை தூா்வாரி ஆழப்படுத்த விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், மயிலாடுதுறை காவிரி வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் மாரிமுத்து உத்தரவின் பேரில், சீா்காழி உதவி செயற்பொறியாளா் விஜயகுமாா் பரிந்துரையின் படி, கொள்ளிடம் நீா்வளத்துறை உதவி பொறியாளா் சிவசங்கரன், பாசன ஆய்வாளா் சீனிவாசன் ஆகியோா் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் தூா்வாரும் பணி புதன்கிழமை தொடங்கியது. 3 நாளில் இப்பணி நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனால், மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள், கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இந்த வாய்க்கால் எப்படி இருந்ததோ, அந்த அளவுக்கு தூா்வாரி, அகலம் மற்றும் ஆழப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com