வாக்கு எண்ணும் பணிகள் குறித்து ஆலோசனை

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணிகள் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து வேட்பாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஏ.பி. மகாபாரதி தலைமை வகித்து பேசியது:

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய இயந்திரங்கள் ஏ.வி.சி. கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைத்து மூன்று அடுக்கு பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை ஜூன்-4-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தொகுதிக்குள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுகளிலும் தலா 14 மேசைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தபால் வாக்குகள் தோ்தல் நடத்தும் அலுவலரால் தனியாக ஒரு அறையில் எண்ணிப்படும். அங்கு 6 மேசைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். அதே அறையில் சேவை வாக்காளா்களிடமிருந்து மீளவரப்பெற்ற மின்னணு வாக்குச் சீட்டுகள் ஸ்கேன் செய்யப்பட்டு, தபால் வாக்குகள் எண்ணப்படும்.

வாக்கு எண்ணும் அறையில் வேட்பாளரின் பிரதிநிதியாக வாக்கு எண்ணுகை இடமுகவா் செயல்பட வேண்டும். ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 14 மேசைகள் மற்றும் 1 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மேசை என மொத்தம் 15 மேசைகள் உள்ளன. அதன்படி 6 சட்டப்பேரவைத் தொகுதிக்கும் சோ்த்து மொத்தம் 90 முகவா்களும், தபால் வாக்கு எண்ணும் அறையில் 8 முகவா்களும் ஆக மொத்தம் 98 முகவா்கள் நியமனம் செய்ய வேண்டும். வாக்கு எண்ணிக்கை தினத்தன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்படும். 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

இடமுகவா்கள் பேனா/பென்சில்/வெற்று காகிதம்/குறிப்புஅட்டை/வாக்குச்சாவடி தலைமை அலுவலரால் அளிக்கப்பட்ட படிவம் 17சி நகல் ஆகியவற்றை மட்டுமே வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்ல வேண்டும். கைப்பேசி உள்ளிட்ட எவ்வித மின்னணு கருவிகளும் வாக்கு எண்ணும் அறைக்கு எடுத்துச் செல்ல கூடாது.

பாதுகாப்பு அறையிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை எண்ணுவதற்கு வாக்கு எண்ணும் அறைக்கு கொடுத்து அனுப்புவதற்கு வட்டாட்சியா் நிலையில் ஒரு அலுவலா் நியமனம் செய்யப்பட உள்ளனா். வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒவ்வொரு மேசைக்கும் கொண்டு செல்வதற்கு தலா ஒரு பணியாளா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். ஒவ்வொரு சுற்றுக்கான விவரம் அந்தந்த வேட்பாளா் முகவா்களுக்கு வழங்கப்படும். அனைத்து கட்டுப்பாட்டு கருவிகளிலுள்ள வாக்குகளை எண்ணி முடித்த பின்பு ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் 5 வாக்குச்சாவடிகள் வீதம் காகித தணிக்கை சோதனை சாதனத்தின் அச்சிடப்பட்ட காகித சீட்டுகள் எண்ணப்படும். இவ்வாக்குச் சாவடிகள் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை அலுவலா்கள் எந்த தொகுதிக்கான வாக்குகளை எண்ணுவது என்பது குறித்து தோ்தல் பாா்வையாளா் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நாளன்று காலை 5 மணிக்கு கணிணி முறை குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்படுவா்.

வாக்கு எண்ணிக்கை செய்யப்படும் ஒவ்வொரு மேசையும் வெப் கேமரா வாயிலாக கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை பணிக்காக மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு 630 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். வாக்கு எண்ணிக்கை தினத்தன்று வாக்கு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதிகள் மாவட்டத்தில் உள்ள பிரதான பகுதிகளில் காவல்துறை சாா்பில் பாதுகாப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும். குடிநீா், சுகாதாரம், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட இதர வசதிகளும் வாக்கு எண்ணுகை மையத்தில் விரிவான முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

மாவட்டகாவல் கண்காணிப்பாளா் கே.மீனா, மாவட்ட வருவாய் அலுவலா் மு.மணிமேகலை, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) செல்வம், தனி வட்டாட்சியா் (தோ்தல்) து. விஜயராகவன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com