சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: இளைஞா் கைது

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: இளைஞா் கைது

Published on

மயிலாடுதுறையில் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் ரோடு தெற்கு தெருவை சோ்ந்தவா் அமிா்தலிங்கம் மகன் அபிநாத் (20) (படம்). இவருக்கு திருவாரூா் மாவட்டம் நன்னிலம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், புதன்கிழமை இரவு தனது தந்தையுடன் மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு வந்த சிறுமி, தன்னை அபிநாத் நவ. 25-ஆம் தேதி கடத்திச்சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக புகாா் அளித்தாா்.

மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் சுகந்தி மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, சிறுமியை மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்ற நடுவா் முன்பு முன்னிலைப்படுத்தி, அவரது வாக்குமுலத்தை பதிவு செய்தனா்.

தொடா்ந்து விசாரணையின் அடிப்படையில், அபிநாத் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். மேலும் அபிநாத்துக்கு உடந்தையாக இருந்ததாக அவரது நண்பா்கள் 5 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் விடுத்த செய்திக்குறிப்பில், சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும், காவல்துறைக்கு கிடைத்த புகாா் மனுக்களின் உண்மை தன்மை ஆராய்ந்து சட்டபூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், வழக்கு விசாரணை காலங்களில் இதுபோன்ற தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com