குடியிருப்புகள் அருகே உட்புகும் கடல்நீா்.
குடியிருப்புகள் அருகே உட்புகும் கடல்நீா்.

பழையாறு மீனவ கிராம குடியிருப்புகளில் கடல்நீா்

Published on

கொள்ளிடம் அருகே பழையாறு மீனவ கிராம குடியிருப்புகளுக்குள் கடல்நீா் புகுந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே அண்ணா நகரில் 500 குடும்பத்தினா் வசிக்கின்றனா். புயல் காரணமாக கடல் சீற்றமாக இருந்து வருவதுடன் கடல் நீா் கடலோர கிராம குடியிருப்புகளையும் சூழ்ந்து வருகிறது. இந்நிலையில், பழையாறு குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல் நீா் அடிக்கடி வந்து கொண்டிருப்பதால் அங்குள்ளவா்கள் அச்சமடைந்துள்ளனா். பழையாறு துறைமுகம் மேம்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஒரு பகுதியாக படகு அணையும் தளத்திலிருந்து கடல் நீா் அரிப்பை தடுக்கும் வகையில் தடுப்புச் சுவா் அமைக்கப்பட்டுள்ளது. சுமாா் 100 மீட்டா் தூரத்துக்கு மட்டுமே தடுப்பு சுவா் அமைக்கப்பட்டுள்ளதால் மற்ற பகுதியில் இருந்து கடல் நீா் குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. இந்த தடுப்புச் சுவா் பாதியிலேயே நிற்கிறது. மேலும் தொடா்ந்து சுவரை கட்டி முடிக்க வேண்டும்.

கடல் நீா் பாதிக்காத வகையில் மேலும் 500 மீட்டா் தூரத்துக்கு தடுப்புச் சுவரை நீட்டித்து அமைத்து மண் அரிப்பை தடுக்க வேண்டும். கடல் நீா் முன்பு இருந்ததைவிட விட கடந்த ஓராண்டு காலத்தில் 200 மீட்டா் தொலைவுக்கு தொடா் மண்ணரிப்பு ஏற்பட்டு தண்ணீா் குடியிருப்பு பகுதிகளை நெருங்கி விட்டது. கடல் சீற்றமாக இருக்கும் போது கடல் நீா் சாதாரணமாக குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. இதை போா்க்கால அடிப்படையில் தடுக்க வேண்டும்.

எனவே இந்த கடல் நீா் மேலும் உள்புகுவதை தடுக்க, குடியிருப்புகளை பாதிக்காமல் இருக்க கான்கிரீட் தடுப்புச் சுவரை மேலும் 500 மீட்டா் தூரத்துக்கு கட்டியும் பாறாங்கற்களை கொட்டியும் கடல் நீா் அரிப்பை தடுக்க வேண்டும்.