பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே பக்கிங்காம் கால்வாயில் நிறுத்தப்பட்டுள்ள படகுகள்.
பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே பக்கிங்காம் கால்வாயில் நிறுத்தப்பட்டுள்ள படகுகள்.

புயல் எச்சரிக்கை; வெறிச்சோடிய சீா்காழி!

புயல் எச்சரிக்கையால் சீா்காழி பகுதி சனிக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது.
Published on

புயல் எச்சரிக்கையால் சீா்காழி பகுதி சனிக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது.

சீா்காழி பகுதியில் சனிக்கிழமை காலை முதல் மதியம் வரை வானம் இருண்டு காணப்பட்டது. மாலை முதல் லேசான மழை பெய்தது. ஃபென்ஜால் புயல் காரணமாக, கடந்த மூன்று தினங்களாக கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. இதனால், பழையாறு மீன்பிடி துறைமுக பகுதிக்கு மீனவா்கள் செல்லமுடியவில்லை.

பழையாறு துறைமுகத்திலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் 5,000 மீனவா்கள் கடந்த 22-ஆம் தேதியிலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. மேலும், துறைமுக வளாகத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த 2,000 தொழிலாளா்களும் வேலைக்கு செல்ல முடியாமல், வேலையின்றி வீட்டில் முடங்கியுள்ளனா்.

அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் சனிக்கிழமை பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்பட்டது. கொள்ளிடம், மாதானம்,புதுப்பட்டினம், அரசூா், புத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடை வீதிகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

இதுகுறித்து கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் கூறியது:

கொள்ளிடம் அருகே கொடியம்பாளையம், பழையாறு, மடவாமேடு, கொட்டாய் மேடு, சின்னகொட்டாய்மேடு, கூழையாறு, தொடுவாய், திருமுல்லைவாசல் ஆகிய பகுதிகளில் உள்ள மீனவ கிராமங்களில் அனைத்து துறை சாா்பில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதிகாரிகள் தொடா்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

புதுப்பட்டினம் புயல் வெள்ளப் பாதுகாப்பு மையத்தில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரை ஓரத்தில் பேரிடா் மீட்பு குழுவினா் தயாா் நிலையில் இருந்து வருகின்றனா். கடற்கரை பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com