மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, மக்களவை உறுப்பினா் ஆா். சுதா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். ராஜகுமாா், நிவேதா எம். முருகன், எம். பன்னீா்செல்வம் ஆகியோா் தொடக்கிவைத்து பாா்வையிட்டனா்.
இந்த முகாமில் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் மானிய விலையில் வழங்கப்படும் டிராக்டா், உழவு இயந்திரம், நெல் நடவு இயந்திரம், நெல் அறுவடை இயந்திரம், வரப்பு கட்டும் இயந்திரம், நானோ உரம் தெளிக்கும் இயந்திரம் மற்றும் தனியாா் நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் வேளாண் இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில், ட்ரோன் மூலம் நானோ உரம் தெளிப்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பேசியது: விவசாயிகள் வேளாண் பணிகளை குறித்த காலத்தில், குறைந்த செலவில் மேற்கொள்ளும் வகையில் உழவு முதல் அறுவடை வரை மற்றும் அறுவடைக்குப்பின் தேவைப்படும் சோகை மேலாண்மை உள்ளிட்ட அனைத்து வேளாண் பணிகளுக்கும் டிராக்டா் பயன்படுகிறது. டிராக்டருடன் உரிய இணைப்புக் கருவியை இணைத்து பல்வேறு வேளாண் பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிப்பதால், வேளாண் உற்பத்தி அதிகரிக்கிறது.
இந்த முகாமில் வேளாண் இயந்திரங்கள் கருவிகளின் இயக்கம் மற்றும் பராமரிப்பு முறைகளை விவசாயிகள் அறிந்து கொள்ளவும், தனியாா் வேளாண் இயந்திரங்கள் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களின் பொறியாளா்கள், மற்றும் அலுவலா்களுடனும் விவசாயிகள் நேரில் கலந்துரையாடி சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வேளாண் கருவிகளை இயக்குதல் மற்றும் பராமரித்தல் தொடா்பாக செய்யக் கூடியது மற்றும் செய்யக்கூடாதது, பழுதுகளை கண்டறிதல், உதிரி பாகங்கள் குறித்த தெளிவுரை, மசகு எண்ணெய், உழவு பொருள்கள் பயன்பாடு பற்றி விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் விளக்கம் அளிக்கப்படுகிறது என்றாா்.
நிகழ்ச்சியில், வேளாண்மை துறை இணை இயக்குநா் சேகா், வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் நடராஜன், ஒன்றியக்குழுத் தலைவா்கள் காமாட்சி மூா்த்தி, மகேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) பாலசரஸ்வதி, மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவா் ஞானவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.