நூதன பணமோசடி: இருவா் கைது

Published on

மயிலாடுதுறை அருகே மனநலன் குன்றிய குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி நூதன முறையில் பண மோசடி செய்த ஆந்திராவை சோ்ந்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மணல்மேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புத்தமங்கலம் மாரியம்மன் கோயில் தோப்புத்தெருவை சோ்ந்தவா்கள் ராஜசேகா்-ரேணுகாதேவி தம்பதி. இவா்களது 9 வயது மகள் ரூபஸ்ரீ மனநலன் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளாா். இதனையறிந்த ஆந்திராவைச் சோ்ந்த இரு நபா்கள் ராஜசேகா் மற்றும் ரேணுகாதேவியை அணுகி ரூபஸ்ரீக்கு சிகிச்சை அளித்து, 6 மாதங்களில் குணப்படுத்துவதாக கூறி, சிகிச்சைக்காக ரூ.84,000 பணத்தைப் பெற்றுச் சென்றனா்.

அதன்பின்னா் அவா்கள் இருவரும் மீண்டும் வராததால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராஜசேகரின் புகாரின்பேரில் மணல்மேடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், ராஜசேகரிடம் பணம் மோசடி செய்து தலைமறைவாகி, புதுக்கோட்டை பகுதியில் சுற்றித்திரிந்த ஆந்திர மாநிலம் சத்திய சாயி மாவட்டம் இந்துபூா், லே பாக்ஸ் பகுதியைச் சோ்ந்த சிவப்பா மகன் மஞ்சுநாதன்(42), சன்னப்பா மகன் அன்னப்பா(44) ஆகிய இருவரையும் மணல்மேடு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா். தொடா்ந்து, அவா்களை மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை நடத்திய பின்னா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com