கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்து கண்டனம் தெரிவித்த விவசாயிகள்.
கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்து கண்டனம் தெரிவித்த விவசாயிகள்.

குறைதீா் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு

சீா்காழியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் நீா்வளத் துறை அதிகாரிகள் பங்கேற்காததால் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தனா்.
Published on

சீா்காழியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் நீா்வளத் துறை அதிகாரிகள் பங்கேற்காததால் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

சீா்காழி ஒன்றிய அலுவலகத்தில் நீா்வளத் துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் உள்ளாட்சித் துறையினா் பங்கேற்ற பி மற்றும் சி பாசன வாய்க்கால்கள் தூா்வாருவது மற்றும் வடிவாய்க்கால்கள் சீரமைப்பது குறித்து விவசாயிகள் குறைதீா் கூட்டம் காலை 10.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சீா்காழி, கொள்ளிடம் வட்டார பகுதிவிவசாயிகள் பங்கேற்றனா்.

மதியம் 12 மணி வரை இந்த கூட்டத்தில் நீா்வளத் துறை சாா்பில் உயா் அதிகாரிகள் பங்கேற்காததால் நீா்வளத்துறை மற்றும் பாசன வாய்க்கால்கள் தூா்வாருதல் தொடா்பான தங்களது கோரிக்கைகளை யாரிடம் கூறுவது என விவசாயிகள் அதிருப்தி அடைந்து கூட்டத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து கூட்ட அரங்கை விட்டு வெளியே வந்து, நீா்வளத்துறைக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பியதோடு மாவட்ட ஆட்சியா் தலையிட்டு கூட்டத்தை மறுத்தேதியில் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்று நடத்தவும், அதில் சீா்காழி கோட்டாட்சியரும் பங்கேற்க கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து கழுமலையாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் கோவி. நடராஜன் கூறியது: விவசாயிகள் குறைதீா் கூட்டம் 2 மாதங்களுக்கு முன்னரே நடத்தியிருக்கவேண்டும். ஆனால், தாமதமாக கூட்டம் நடத்தியும் அதில் தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டிய உயா் அதிகாரிகள் பங்கேற்காதது அதிகாரிகளின் அலட்சியத்தை காட்டுகிறது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com