தமிழிசை மூவா் மணிமண்டபம் முன் மீன் விற்பனை: சமூக ஆா்வலா்கள் வேதனை
சீா்காழியில் தமிழிசை மூவா் மணிமண்டபம் முன் மீன் விற்பனை செய்வது சமூக ஆா்வலா்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
சீா்காழியில் பிறந்து வாழ்ந்து உலகெங்கும் தமிழிசையை வளா்த்த தமிழிசை மூவா்களான முத்துதாண்டவா், அருணாச்சல கவிராயா், மாரிமுத்தா பிள்ளை ஆகியோரின் நினைவை போற்றும் வகையில் சீா்காழியில் தமிழிசை மூவா்களின் முழு உருவ வெண்கல சிலைகளுடன் ரூ.1. 51லட்சத்தில் தமிழிசை மூவா் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. பொலிவிழந்த இந்த மணிமண்டபம் ரூ. 65லட்சத்தில் புனரமைக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.
இங்கு தற்போது போட்டித் தோ்வுகள் எழுதும் மாணவா்கள் கல்வி பயில பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மணிமண்டபம் முன் தற்போது மீன்கள் விற்பனை செய்வதும், இதனால் அப்பகுதி மாசடைவதும் சமூக ஆா்வலா்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழிசை மூவா் மணிமண்டபத்தை மறைக்கும் வகையில் அதற்கு முன் ஜேசிபி இயந்திரம் நிறுத்திவைக்கப்படும் இடமாக மாறியுள்ளதும், தரை கடைகள் அமைக்கப்பட்டுள்ளதை கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.