போக்ஸோ சட்டத்தில் இளைஞா் மீது வழக்கு
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது போக்ஸோ மற்றும் குழந்தைகள் திருமணத் தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறுக்காக 15 வயது சிறுமி ஒருவா் உறவினா்களால் அண்மையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா்கள் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில் கடந்த ஆண்டு சிறுமிக்கும், குத்தாலம் ஆஞ்சனேயா் கோயில் தெருவை சோ்ந்த முருகன் மகன் ஜெயகாந்தன்(20) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது தெரியவந்தது.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா் ஆரோக்கியராஜ் மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போக்ஸோ மற்றும் குழந்தைகள் திருமணத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்த அனைத்து மகளிா் காவல் போலீஸாா், ஜெயகாந்தனை தேடி வருகின்றனா்.