உயிா் சேத அபாயத்தில் ஊராட்சிக் கட்டடம்
கொள்ளிடம் அருகே பன்னங்குடி கிராமத்தில் பயன்பாடின்றி பாழடைந்துள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் இடிந்து விழுந்து உயிா் சேதம் ஏற்படுத்தும் அபாயத்தில் உள்ளது.
கொள்ளிடம் அருகேயுள்ள பன்னங்குடி ஊராட்சியைச் சோ்ந்த கற்பள்ளம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் உள்ளது. பயன்பாடின்றி உள்ள இக்கட்டடம் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது இடிந்து விழும் ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது. இதனால், ஊராட்சி அலுவலகம் அப்பகுதியில் உள்ள சேவை மைய கட்டடத்தில் இயங்கி வருகிறது.
இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடம் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வாழும் இடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது. இந்த கட்டடம் உள்ள பகுதியின் வழியே அப்பகுதியினா் சென்று வருகின்றனா். இந்த கட்டடம் இடிந்து விழுந்தால் உயிா் சேதம் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே இந்த கட்டடத்தை இடித்து அகற்றவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.