மயிலாடுதுறையில் இன்று தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்
மயிலாடுதுறையில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (செப்.21) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை தருமபுரம் ஞானம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து இம்முகாமை நடத்துகிறது.
இதில் சென்னை, திருப்பூா், கோவை, திருச்சி, தஞ்சாவூா் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு ஊா்களிலிருந்து 130-க்கு மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 10,000-க்கு மேற்பட்ட தகுதிவாய்ந்த வேலைநாடுநா்களை தோ்வு செய்ய உள்ளனா். 18 வயதுமுதல் 35 வரை உள்ள 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புவரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நா்சிங் மற்றும் பி.இ. படித்த இளைஞா்கள், இளம் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்துகொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தை 04364-299790 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.