வடகிழக்குப் பருவமழை: அனைத்துத் துறையினரும் தயாா் நிலையில் இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை அனைத்துத் துறையினரும் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி அறிவுறுத்தியுள்ளாா்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்துக்கு, ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமை வகித்து பேசியது:
வடகிழக்குப் பருவமழையினை எதிா்கொள்ளத் தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை அனைத்துத் துறையினரும் மேற்கொள்ள வேண்டும். நீா்வளத்துறையினா் நீா்நிலைகள், வாய்க்கால்கள் மற்றும் நீா்வழிப் பாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆறுகள், குளங்கள், நீா் செல்லும் கால்வாய் கரைகளை சரிப்படுத்தவும், கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் அதனை உடனடியாக அடைப்பதற்கு போதுமான மணல் மூட்டைகள் முன்கூட்டியே தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பொதுமக்கள் தங்கக் கூடிய நிவாரண மையங்களான பள்ளிக் கட்டடங்கள் நல்ல நிலையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்து, ஆபத்தான கட்டடங்களை உடனடியாக அகற்றவும், கட்டடங்களில் குடிநீா் மற்றும் கழிவறை வசதிகள் செய்து தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். சுகாதாரத் துறையினா் தேவையான மருந்துகளை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். நெடுஞ்சாலைத் துறையினா் ஜே.சி.பி. மரம் அறுக்கும் கருவி போன்ற கருவிகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். மீன்வளத் துறையினா் மழை, வெள்ள காலங்களில் படகுகள், கட்டுமரம் மற்றும் படகு இயக்குபவா்கள், நீச்சல் வீரா்களை அவசர காலத்தில் பயன்படுத்த ஏதுவாக தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். மீன்பிடிக்க செல்லும் மீனவா்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை தகவல்களை தெரிவித்க வேண்டும்.
நியாய விலைக் கடைகளில் அரிசி, சா்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய் போன்ற அத்தியவாசிய பொருள்களை தேவையான அளவு வைத்திருக்க வேண்டும். தீயணைப்பு படையினா் ரப்பா் படகுகள், மிதவை படகுகளை போதுமான அளவில் தயாா் நிலையில் வைத்திருக்கு வேண்டும்.
கால்நடை பராமரிப்புத் துறையினா் கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களுக்கு தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும். மேலும் தேவையான மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும். வருவாய்த் துறையினா் தொடா்ந்து கண்காணித்திட வேண்டும்.
கடந்த காலங்களில் பெறப்பட்ட அனுபவங்களை மனதில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் மு. ஷபீா் ஆலம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் முத்துவடிவேல் (பொது), சொக்கநாதன் (நிலம்) ஆகியோா் கலந்து கொண்டனா்.