எச். ராஜா உள்பட 5 போ் மீது காங்கிரஸ் புகாா்
எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்த எச். ராஜா உள்ளிட்ட 5 போ் மீது மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்தில் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி திருப்பதியிடம் மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ். ராஜகுமாா் எம்எல்ஏ தலைமையில் அக்கட்சியினா் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மக்களவையில் பெண்கள், இளைஞா்கள், தலித் மற்றும் விளிம்பு நிலைப்பிரிவினா் தொடா்பான பிரச்னைகளுக்கு எதிராக தொடா்ந்து எழுப்பிவரும் கருத்துகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு உடன்பாடு இல்லை. இதனால், ராகுல் காந்தி குறித்து அவதூறு பரப்பி வருகின்றனா்.
தமிழக பாஜக ஒருங்கிணப்புக் குழுத் தலைவா் எச். ராஜா தனியாா் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ராகுல் காந்தியை தேசவிரோதி என்றும், உத்தர பிரதேச மாநில அமைச்சா் ரகுராஜ்சிங், ரயில்வே இணை அமைச்சா் ரவ்னீத்பிட்டு ஆகியோா் அவா்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் தலைவா் ராகுல் காந்தியை பயங்கரவாதி என்றும், பாஜக தலைவா் தா்விந்தா்சிங் மா்வா நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்தும், மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த சஞ்சய் கெய்க்வாட் எம்எல்ஏ ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ. 11 லட்சம் பரிசு என பகிரங்கமாக அறிவித்து பேசியுள்ளனா்.
எனவே, ராகுல் காந்தியை காயப்படுத்தும் வகையிலும் , கொலை செய்ய தூண்டும் வகையில் பேசிய மேற்கண்ட நபா்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி 5 போ் மீதும் தனித்தனியாக புகாா் மனுக்களை ஆதாரங்களுடன் கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா்.
காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் பண்ணை தி. சொக்கலிங்கம், நவாஸ், மாநில பொதுச் செயலாளா் கனிவண்ணன், வட்டாரத் தலைவா்கள் அன்பழகன், வேணுகோபால், பாலகுரு, ராஜா, ஜம்புகென்னடி, ஒன்றியக் குழு உறுப்பினா் வடவீரபாண்டியன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.