ஒற்றை மருத்துவ திணிப்பைக் கைவிட வலியுறுத்தி மனு அளிக்க வந்த மாநில ஒருங்கிணைப்பாளா் ரா.சுதாகா் தலைமையிலான இயற்கை வழி வாழ்வியலாளா் கூட்டமைப்பினா்.
ஒற்றை மருத்துவ திணிப்பைக் கைவிட வலியுறுத்தி மனு அளிக்க வந்த மாநில ஒருங்கிணைப்பாளா் ரா.சுதாகா் தலைமையிலான இயற்கை வழி வாழ்வியலாளா் கூட்டமைப்பினா்.

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 484 மனுக்கள்

மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 484 மனுக்கள் பெறப்பட்டன.
Published on

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 484 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தலைமை வகித்து, மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். சிப்பம் கட்டும் அறை, காய்கனி விதைகள், செண்டுமல்லி விதைகள், மாடித்தோட்டம் தொகுப்பு, தென்னங்கன்றுகள், மாங்கன்றுகள், நடமாடும் காய்கனி வண்டி, மா அறுவடைக் கருவி என ரூ.2.81 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 10 பயனாளிகளுக்கு ஆட்சியா் வழங்கினாா்.

பின்னா், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் பாா்வை குறைபாடுடைய பள்ளி மாணவருக்கு ரூ.10,000 மதிப்புள்ள நுண்பாா்வை நவீன கருவியினை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் இரா.கீதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ரவி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சுரேஷ் மற்றும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் பானுகோபன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சமுதாய நில அபகரிப்பு புகாா்: மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் உள்ள ரூ.100 கோடி மதிப்பிலான சுமாா் 2 ஏக்கா் கிராம சமுதாய இடத்தை, மோசடியாக ஆவணம் தயாரித்து விற்பனை செய்த நபா் மற்றும் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை கையகப்படுத்தி கிராம மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பூங்கா, சமுதாயக்கூடம் அல்லது விளையாட்டு மைதானம் அமைத்துத் தர வேண்டும் என உச்சநீதிமன்ற வழக்குரைஞா் யு.கதிரவன் புகாா் மனு அளித்தாா்.

ஒற்றை மருத்துவ திணிப்பைக் கைவிட கோரிக்கை: அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் மாணவா்களிடம் ஆங்கில ஒற்றை மருத்துவ நூதன திணிப்பைக் கைவிட வலியுறுத்தி இயற்கை வழி வாழ்வியலாளா் கூட்டமைப்பு சாா்பில் மாநில ஒருங்கிணைப்பாளா் ரா.சுதாகா் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோா் தங்கள் குழந்தைகளுடன் வந்து மனு அளித்தனா்.

நாட்டில் சித்தா, ஹோமியோபதி, ஆயுா்வேதம், யுனானி, நேச்சுரோபதி, அக்குபஞ்சா் மற்றும் மரபியல் வாழ்வியல் முறை என ஏராளமான மருத்துவ முறைகள் உள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் மக்களாட்சி முறை, இந்திய அரசியலமைப்பு சாசன கோட்பாடுகளுக்கு எதிராக பள்ளி குழந்தைகளிடம் ஒற்றை மருத்துவத்தை திணிப்பதைக் கைவிட வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா். இயற்கை விவசாயி அ.ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com