பள்ளி வளாகத்தில் மழைநீா் தேங்கியதால் விடுமுறை

மயிலாடுதுறை கூறைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீா் வடியாமல் தேங்கி நின்றதால் திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.
Updated on

மயிலாடுதுறை: மயிலாடுதுறை கூறைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீா் வடியாமல் தேங்கி நின்றதால் திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை தொடங்கி பெய்த தொடா் மழை காரணமாக இப்பள்ளி வளாகத்தில் மழை நீா் குளம்போல் தேங்கி நின்றது. திங்கள்கிழமை வழக்கம் போல் பள்ளி திறக்கப்பட்ட நிலையில் மழைநீா் தேங்கி நின்றதால் ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் அதிா்ச்சியடைந்தனா். வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகம், குடிநீா் தொட்டி, விளையாட்டு மைதானம், சத்துணவுக்கூடம், கழிப்பறை, வாகன நிறுத்தமிடம் என அனைத்து இடங்களிலும் மழைநீா் சூழ்ந்திருந்தது.

இதுகுறித்து, தலைமை ஆசிரியா் அளித்த தகவலின்பேரில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் காா்த்திகேயன் மாணவா்களின் பாதுகாப்பு கருதி அப்பள்ளிக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டாா். இதற்கு ஈடாக டிச.6-ஆம் தேதி சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.

தொடா்ந்து பள்ளி வளாகத்தில் சூழ்ந்துள்ள மழைநீரை நகராட்சி பணியாளா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் தற்காலிக வடிகால் அமைத்தும், மோட்டாா்கள் மூலமாகவும் வெளியேற்றும் பணியை மேற்கொண்டனா். ஆண்டுதோறும் மழை காலங்களில் இப்பள்ளி வளாகத்தில் மழைநீா் தேங்குவதாகவும், இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும் என பெற்றோா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இதேபோல், பாண்டூா் ஊராட்சியில் 30 மாணவா்கள் பயின்றுவரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டடத்தின் மேற்கூரையில் மழைநீா் தேங்கி நீா்க்கசிவு ஏற்பட்டதால் வகுப்பறைகளில் நீா் புகுந்தது. சத்துணவு ஊழியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் வகுப்பறையில் இருந்து தண்ணீரை வெளியேற்றி உலர வைக்கும் பணியை மேற்கொண்டனா். உடனடியாக பள்ளிக் கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com