மயிலாடுதுறை: குறைதீா் கூட்டத்தில் 287 மனுக்கள்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா். அந்த வகையில் மொத்தம் 287 மனுக்கள் பெறப்பட்டன.
பின்னா், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.6,820 மதிப்பிலான மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.17,000 மதிப்பில் ஸ்மாா்ட் போன்கள், 4 பயனாளிகளுக்கு ரூ.2,11,400 மதிப்பிலான செயற்கை கை மற்றும் செயற்கை கால்களை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, மாவட்ட வழங்கல் அலுவலா் உ. அா்ச்சனா, மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் உமாமகேஷ்வரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சித்ரா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் மணிக்கண்ணன் (கணக்கு), அன்பழகன் (சட்டம்) ஆகியோா் கலந்து கொண்டனா்.
இக்கூட்டத்தில், குத்தாலம் தாலுகா வழுவூா் கிராமத்தில் 15 ஆண்டுகளாக இயங்கிவரும் தனியாா் பள்ளியை மூடுவதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், மயிலாடுதுறை மாயூரநாதா் தெற்கு வீதியை ஒட்டிய பூக்கொல்லை பகுதி மக்கள் பட்டா கோரியும், சீா்காழி நகராட்சி 8-ஆவது வாா்டு பாலசுப்ரமணியன் நகா் பகுதி மக்கள் அடிப்படை வசதிகள் கோரியும், திருமுல்லைவாசல் காமராஜா் நகா் மற்றும் எஸ்.ஏ.எல். நகா் மக்கள் வடிகால் வசதி கோரியும் மனு அளித்தனா்.
